Friday, July 13, 2018

கமலஹாசன் என்னும் ஐயங்காரின் சாதி ஒழிப்பு ஐடியா! சில மாதங்களுக்கு முன்னே அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத் திறப்பு விழா ஒன்றின் இறுதியில் ஒரு இளைஞர் கேட்ட கேள்வி இது: "நான் ஒரு தலித், நான் இட ஒதுக்கீட்டிலோ, அரசு கொடுத்த ஸ்காலர்ஷிப்பிலோ படிக்கவில்லை. அதனால் நான் இட ஒதுக்கீட்டில் படிக்காதவன், அரசின் உதவித்தொகைகளைப் பெறாதவன் என்று இந்த அரசாங்கம் எனக்குத் தனியாக ஒரு சான்றிதழ் கொடுக்குமா?" என்று கேட்டான். அவன் கேட்டதின் பின்னணியில் உள்ள வலி உங்களுக்குப் புரியாமல் போனால், அந்தக் கேள்வியில் உள்ள சமூகத்தின் குரூரத்தனம் உங்களுக்கு பிடிபடாமல் போனால், உங்களால் ஒருக்காலும் இந்தியச் சமூகத்தைப் புரிந்துக்கொள்ளவே முடியாது. "இட ஒதுக்கீடு பெறுகிறேன், ஸ்காலர்ஷிப் பெறுகிறேன் என்கிற காரணத்தில்தானே இந்தச் சமூகம் என்னை ஒடுக்குகிறது? நான் அதையெல்லாம் விட்டொழிக்கத் தயாராகி விட்டேன், இனியாவது என்னை சாதிய ரீதியாக அணுகாதீர்கள்" என்கிற கோரிக்கையைத்தான் அவன் இந்த சமூகத்தின் முன் வைக்கிறான், கமல்ஹாசன்தான் இந்தியச் சமூகத்தின் சாதிய அடையாளங்களையும் குறியீடுகளையும் மூலதனமாக்கி, சாதியத்தை மேலும் நியாயப்படுத்தும், கூர்மைப்படுத்தும் போக்கைத் தனது வணிக சினிமாவில் காலம் காலமாகச் செய்துவருகிறார். ஆனால், முற்போக்காளன் என்னும் போர்வையில். சாதியை ஒழித்துக்கொண்டே "சபாஷ் நாயுடு" என்கிறார். நேரடியான சாதி வெறியர்களைக் காட்டிலும், கமல்ஹாசனைப் போன்ற போலி சமத்துவவாதிகள் ஆபத்தானவர்கள். இவர்கள் கொலையாளிகள் அல்ல; தற்கொலையைத் தூண்டுபவர்கள்.


வாசுகி பாஸ்கர்

"என் தந்தை பாலய்யா" ஒய்.பி.சத்தியநாராயணனால் எழுதப்பட்ட புத்தகம். தன் தந்தை பாலய்யாவின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் கதை. தலித் சமூகத்தை சேர்ந்த பாலய்யா, தனக்குக் கிடைக்காமல்போன கல்வி வாய்ப்பைத் தன் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்து, முதல் தலைமுறை கரையேற்றப்படும் சிக்கல்களையும் வலிகளையும் தனது வரலாற்றிலிருந்து தொகுத்த நூல்.

அதில் ஒரு நிகழ்வு. நூலாசிரியரும் பாலய்யாவின் மகனுமான சத்யா கல்லூரியில் படிக்கும்போது தலைமையாசிரியர் ஒருமுறை அழைத்திருப்பார். கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபெற்றுக் கல்லூரி சார்பாக வெற்றி பெற்றிருந்ததனால் பாராட்டுவதற்கான அழைப்பு அது. சத்யாவும் போயிருக்கிறார், தலைமையாசிரியர் சத்தியாவைப் பாராட்டிவிட்டு "உனக்கு நிறைய திறமை இருக்கு, நல்லா படிக்கவும் செய்யுற, அதனால உன் பெயரை சத்தியாவுல இருந்து சத்தியநாராயணா என்று நான் மாற்றப்போறேன், சத்தியா என்று இருந்தால் அது உன் எதிர்காலத்தை பாதிக்கும், நான் உன் அப்பாவிடம் இது குறித்து பேசுகிறேன்" என்று சொல்லி, அதற்குப் பிறகு சத்தியா என்பவர் சத்தியநாராயணா என்று பெயர் மாற்றப்பட்டார்.

"யா" என்று முடியும் பெயர்களை ஆந்திராவின் அன்றைய சமூகத்து ஆதிக்கச் சாதி இந்துக்கள் சூட்டுவதில்லை, சத்யா என்றாலே அது தலித் சமூகத்துப் பெயராகத்தான் இருக்குமென்கிற வழக்கம் அங்கே இருந்திருக்கிறது, அதன் பொருட்டே சத்யா என்னும் பெயர் பார்ப்பனத் தன்மையைக் கொண்டுள்ள சத்திய நாராயணா என்று மாற்றப்பட்டுள்ளது.

சாதியச் சமூகத்தின் சிக்கலான அமைப்பு

இதுதான் இந்திய சாதியச் சமூகத்தின் உண்மை முகம். இங்கே உடையிலிருந்து உணவு வரை, பிறப்பிலிருந்து பெயர் வரை எல்லாமே சாதியம். இந்தியச் சாதி அமைப்பின் சிக்கல்களை அதன் பிடியிலிருந்தே புரிந்துகொள்வது அத்தனை சுலபமான காரியமல்ல. இந்தியாவில் அண்ணல் அம்பேத்கரைத் தவிர சாதியத்தின் கூறுகளை வரலாற்றிலிருந்து ஆராய்ந்து, நடைமுறைச் சமூகத்தோடு பொருத்திச் சாதியத்தை விளக்கியவர் வேறு யாருமில்லை. அதனால்தான் அண்ணல் அம்பேத்கரை "என் தலைவர்" என்றார் தந்தை பெரியார்.

ஒரே மாதிரியான உச்சரிப்பைக் கொண்ட "சத்யா" என்னும் பெயருக்கும் "சத்தியநாராயணா" என்னும் பெயருக்குமிடையிலான வேறுபாட்டைச் சாதிய ரீதியாக அர்த்தம் கற்பித்துக்கொள்ளும் நுட்பமான அமைப்பாகச் சாதியம் இருப்பதால்தான் "சாதிக்கென்று எந்த உருவமும் இல்லை, அது ஒரு மனநிலை" என்கிறார் அண்ணல் அம்பேத்கர். இப்படியான சாதிய அமைப்பிலிருந்துதான் சாதிச் சான்றிதழை ஒழித்தால் சாதி ஒழியும் என்கிற கருத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிவருகிறார் சாதி ஒழிப்புப் போராளி கமல்ஹாசன்.

பூணுல் துறந்த பார்ப்பன முற்போக்காளராகத் தன்னை காண்பித்துக்கொள்ளும் கமல்ஹாசன் தன் தந்தையின் பெயரைச் சொல்லும்போதுகூட "ஸ்ரீனிவாச ஐயங்கார்" என்று சொல்லத் தவறியதில்லை. சாதி வேண்டாம் சாதி வேண்டாம் என்று தனக்குத் தானே ஆயிரம் முறை சொல்லிக்கொண்டாலும் கூட, கமல்ஹாசன் உச்சரிக்கும் அந்த ஐயங்கார் என்னும் ஒரு வார்த்தை இந்தச் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அவருக்கான மொத்த வரலாற்றையும் சுமந்து வரும். என் பிள்ளைகளுக்கு நான் சாதியத்தைக் கற்பித்ததில்லை என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் அதே வேளையில் "நான் ஒரு ஐயங்கார் பெண்" என்று சொல்லிக்கொள்கிறார் அவரது மகள் ஸ்ருதிஹாசன். இதுதான் கமல்ஹாசன் சாதியத்தை ஒழித்த லட்சணம். இது கமல்ஹாசனை மட்டுமே சாடும் பதிவல்ல. இந்த மேட்டுக்குடி மனநிலையோடு சாதி ஒழிப்பைப் பேசும் போக்கினால் விளையப்போகும் ஆபத்தை விளக்கும் பதிவு.

சாதியென்பது கருவறையிலிருந்து கல்லறை வரை இருக்கிறது, பண்பாட்டில் இருக்கிறது, கலாச்சாரம் என்று சொல்லப்படும் இந்திய வழமைகளில் இருக்கிறது, குடும்பச் சடங்குகளில் இருக்கிறது, திருமணச் சடங்குகளில் இருக்கிறது, பெண்கள் அணியும் தாலியில் இருக்கிறது, ஊராகவும் சேரியாகவும் இருக்கிறது, பார்ப்பன அக்ரஹாரத் தெருக்களில் இருக்கிறது, கோவிலில் இருக்கிறது, இந்தியர்கள் உலகின் எந்தெந்தப் பகுதிக்கெல்லாம் இடம் பெயர்கிறார்களோ அங்கெல்லாம் இருக்கிறது.

.

இங்கிலாந்து அனுபவம்

இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் சக இந்தியரால் சாதிய ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாவதாகப் புகார் தெரிவித்திருந்தனர், ஆரம்பத்தில் இந்தப் புகார்கள் பெரிய அளவில் கண்டுகொள்ளப்படவில்லை. பின் தொடர் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசு கவனத்தில் கொள்ள ஆரம்பித்தது. Committee for the elimination of Racial Discrimination (CERD ) பரிந்துரையின்படி 9 (5 ) a Equality Act பிரிவில் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி 2010இல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கேள்விக்குள்ளானபோது அரசுத் தரப்பில் நீதிமன்றத்துக்கு சொல்லப்பட்ட பதில்: "Caste is Complex and hard to define" (சாதி என்பது சிக்கலானது, வரையறுப்பதற்குக் கடினமானது).

பின்னாளில் சாதிய ரீதியான ஒடுக்குமுறைகள் குறித்து ஆய்வு நடத்தியபோது பணியிடங்களில் மட்டுமே 10 % சாதிய ரீதியான அடக்குமுறைகள் நடந்தது தெரியவந்தது, அங்குள்ள சாதி இந்துக்கள் இந்த வழக்கை இங்கிலாந்து அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது என்று இந்து அமைப்புகள் மூலம் அழுத்தம் கொடுத்திருக்கின்றனர்.

ஆம், "சாதி என்பது சிக்கலானது, வரையறுப்பதற்குக் கடினமானது". சாதியைக் கண்டறிவதும் விளக்குவதும் அத்தனை சுலபமான காரியமல்ல, இந்தியச் சமூகத்துக்கே அந்த தடுமாற்றம் இருக்கும்போது இங்கிலாந்து அரசு தடுமாறியதில் ஆச்சரியமில்லை. ஆனால்; சாதி ரீதியான இட ஒதுக்கீடும் சான்றிதழும் இல்லாத இங்கிலாந்து மண்ணில் எப்படிச் சாதியம் குடியேறியது? சாதி அடக்குமுறைகள் இருக்கிறது? என்று கமல்ஹாசனால் விளக்க முடியுமா?

சான்றிதழுக்கும் சாதிக்கும் என்ன தொடர்பு?

கமல்ஹாசன் என்னும் தனிநபரை மையப்படுத்தி எழுந்த கேள்விகளும் விளக்கங்களும் அல்ல இவை. சாதியம் எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ, அதையெல்லாம் பத்திரமாகப் பூட்டி, சாதிக்கு எந்தவொரு அடியும் கீறலும் ஏற்படாமல் சாதியை ஒழிக்கச் சொல்லப்படும் வழிமுறைகள்தான் இடஒதுக்கீட்டை ஒழிப்பதும், சாதிச் சான்றிதழை ஒழிப்பதும். சாதிச் சான்றிதழ் இல்லாமலேயே "தான் ஒரு ஐயங்கார் வீட்டுப் பெண்" என்று சொல்லிக்கொள்ளும் கமல்ஹாசனின் மகளைப் போல, வீட்டிலிருக்கும் சாதி ஒழியவே ஒழியாது என்பதனை உறுதியாய் தெரிந்துக்கொண்டுதான் அதற்கான வழிகளைச் சொல்கிறார்கள் கமல்ஹாசனைப் போன்ற சாதியொழிப்புப் போராளிகள்.

சாதிச் சான்றிதழுக்கும் சாதிக்கும் தொடர்பிருப்பதாக இவர்கள் செய்யும் இந்தத் தொடர் பொய்ப் பிரச்சாரத்தினால் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது. சில மாதங்களுக்கு முன்னே அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத் திறப்பு விழா ஒன்றின் இறுதியில் ஒரு இளைஞர் கேட்ட கேள்வி இது: "நான் ஒரு தலித், நான் இட ஒதுக்கீட்டிலோ, அரசு கொடுத்த ஸ்காலர்ஷிப்பிலோ படிக்கவில்லை. அதனால் நான் இட ஒதுக்கீட்டில் படிக்காதவன், அரசின் உதவித்தொகைகளைப் பெறாதவன் என்று இந்த அரசாங்கம் எனக்குத் தனியாக ஒரு சான்றிதழ் கொடுக்குமா?" என்று கேட்டான்.

அவன் கேட்டதின் பின்னணியில் உள்ள வலி உங்களுக்குப் புரியாமல் போனால், அந்தக் கேள்வியில் உள்ள சமூகத்தின் குரூரத்தனம் உங்களுக்கு பிடிபடாமல் போனால், உங்களால் ஒருக்காலும் இந்தியச் சமூகத்தைப் புரிந்துக்கொள்ளவே முடியாது. "இட ஒதுக்கீடு பெறுகிறேன், ஸ்காலர்ஷிப் பெறுகிறேன் என்கிற காரணத்தில்தானே இந்தச் சமூகம் என்னை ஒடுக்குகிறது? நான் அதையெல்லாம் விட்டொழிக்கத் தயாராகி விட்டேன், இனியாவது என்னை சாதிய ரீதியாக அணுகாதீர்கள்" என்கிற கோரிக்கையைத்தான் அவன் இந்த சமூகத்தின் முன் வைக்கிறான்,

இந்த மனநிலையைத்தான் "சாதியத்திற்கும் சான்றிதழுக்கும் இடஒதுக்கீட்டிற்கும்" தொடர்புள்ளது என்னும் பிரச்சாரத்தின் மூலம் வெற்றிகரமாக ஏற்படுத்தியிருக்கிறார்கள். இட ஒதுக்கீடு என்பது கல்வியிலும் பணியிலும் விகிதாச்சார ரீதியாக அனைத்துச் சமூகத்தவரும் பரவலாக எல்லா இடங்களிலும் பிரதிநிதித்துவம் பெற வேண்டுமென்கிற ஒரு குறைந்தபட்ச ஏற்பாடு. அதன் மூலம் ஆண்டாண்டு காலமாய் இந்த மண்ணில் உரிமைகளை இழந்த சமூகத்தினர் அந்த உரிமைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும். அதற்கு அந்தச் சமூகத்தினரை அடையாளம் கண்டறிந்து அவர்களை அடையாளப்படுத்த வேண்டும். அதற்கு ஒரு சான்று வேண்டும். அந்தச் சான்றே சான்றிதழ்.

இந்தச் சான்றிதழ் கல்விக்கும் பணிக்கும் தேவைப்படும் காலத்தைத் தவிர வீட்டுப் பெட்டியில் பத்திரமாக உறங்கிக்கொண்டிருக்கும். தான் இந்தச் சாதியை சேர்ந்தவன் என்பதை நிரூபிக்க யார் மார்பிலும் தோள்பட்டையிலும் சாதிச் சான்றிதழ் பூணுலைப் போலத் தொங்கிக்கொண்டிருப்பதில்லை. அப்படியிருக்க, சாதிச் சான்றிதழை ஒழிப்பதால் எப்படிச் சாதி ஒழியும்? சாதிச் சான்றிதழை ஒழித்தால் இட ஒதுக்கீடுதான் ஒழியும். இந்தக் கருத்தை விதைப்பதன் மூலம் மறைமுகமாக இதில் ஒளிந்திருக்கும் செய்தியும் அதுதான்.

அரசியல் பிரவேசம் எடுத்து இந்த நாட்டைத் திருத்திவிடப்போவதாகக் கிளம்பியிருக்கும் கமல்ஹாசனுக்கு இந்தச் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தெரியுமா? அது குறித்து அறிய ஆர்வப்பட்டிருக்கிறாரா? சாதிச் சான்றிதழை ஒழித்தால் சாதி ஒழியும் என்று கமல்ஹாசன் சொன்ன அதே மாதத்தில்தான், சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் கல்வியைத் தொடர முடியாமல் வாழ்க்கையை இழந்த பல இருளர் சமூக மக்கள் திண்டிவனத்திலிருந்து சென்னைக்கு நடைப்பயணமாகச் சென்று போராடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

குறைந்தபட்ச வரலாற்றைச் சொல்ல வேண்டுமானாலும்கூட, இது ஒரு நாற்பதாண்டு காலப் போராட்ட வரலாறு. இந்திய அரசும் மாநில அரசும் எத்தனையோ சட்டங்களையும் அரசாணைகளையும் நீதிமன்றத் தீர்ப்புகளையும் வழங்கிய நிலையிலும், இங்கே சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் வாழ்க்கை கேள்விக்குறியாகும் மாணவர்களை எண்ணிக்கையில் அடக்க முடியாது.

போராட வேண்டிய களம் எது?

மாறாக, சாதியை இந்தச் சமூகத்திலிருந்து உண்மையிலேயே விரட்ட வேண்டுமானால், பண்பாட்டுத் தளம் முழுவதும் பரவிக் கிடக்கும் சாதியத்தைக் கடுமையான சட்டங்கள் கொண்டு சீர்படுத்த வேண்டும். சில அபூர்வமான மரங்களின் வேர்கள் பல மைல்களுக்கு அப்பால் பூமிக்கடியில் பரவிக் கிடப்பதைப் போல இந்தியச் சாதி அமைப்பானது நாம் கற்பனையே செய்து பார்த்திட முடியாத அளவு படர்ந்து விரிந்து வலுவாய் இருக்கிறது. அந்தச் சாதியைச் சட்டத்திற்கு முன் விரோதமாக்க வேண்டும். அதன் கிளைகளைக் கண்டறிந்து வேரோடு அழிக்க வேண்டும். இவையெல்லாம் இந்தியச் சமூகத்தில் சாத்தியமா?

சாத்தியமா என்பதைவிட, சாத்தியப்படுத்தப் போவதேயில்லை. ஏனினில் நாம் முன்னமே சொன்னதைப்போல சாதியானது நம்பிக்கை, கடவுள், கலாச்சாரம், பண்பாடு என்று எங்கும் இருக்கிறது. இந்து திருமணச் சட்டத் திருத்தத்திற்கே இங்கிருந்து ரயிலேறிப் போய் டில்லியில் கண்டனம் தெரிவித்துவிட்டு வந்த சமூகத்தில் இவை அரங்கேறுவதற்கான எந்தச் சாத்தியக்கூறும் இல்லை. அதனால்தான் ஒடுக்கிறவனோடு சண்டையிடுவதைக் காட்டிலும், ஒடுக்கப்படுகிறவனின் வளர்ச்சியைக் கருத்தில் கொள்ள ஆரம்பித்தார்கள் இம்மண்ணின் புரட்சியாளர்கள். அதன் விளைவாக உருவானவைதான் இடஒதுக்கீடும் சாதிச் சான்றிதழ்களும்.

முற்போக்குத் தளத்தில் தன்னைப் பகுத்தறிவுவாதியாக, அறிவுஜீவியாக நிலைநிறுத்திக்கொண்ட கமல்ஹாசனுக்கு இந்தியச் சமூகத்தைக் குறித்த வரலாற்றுப் பார்வையும் கிடையாது, நடைமுறைச் சமூகத்தின் சிக்கல்களும் புரியாது என்கிற உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும். இதே கமல்ஹாசன்தான் இந்தியச் சமூகத்தின் சாதிய அடையாளங்களையும் குறியீடுகளையும் மூலதனமாக்கி, சாதியத்தை மேலும் நியாயப்படுத்தும், கூர்மைப்படுத்தும் போக்கைத் தனது வணிக சினிமாவில் காலம் காலமாகச் செய்துவருகிறார். ஆனால், முற்போக்காளன் என்னும் போர்வையில். சாதியை ஒழித்துக்கொண்டே "சபாஷ் நாயுடு" என்கிறார்.

நேரடியான சாதி வெறியர்களைக் காட்டிலும், கமல்ஹாசனைப் போன்ற போலி சமத்துவவாதிகள் ஆபத்தானவர்கள். இவர்கள் கொலையாளிகள் அல்ல; தற்கொலையைத் தூண்டுபவர்கள்.

No comments:

Post a Comment