தேவிபாரதி
.
காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வரைவுச் செயல்திட்டத்தை வரும் 14ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாகவும் மேற்கொண்டு கால அவகாசம் எதையும் கோரப் போவதில்லை எனவும் கர்நாடக மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பதற்கு இரண்டு நாள்கள் முன்னதாக அறிவித்திருக்கிறார் மத்திய நீர்வளத் துறையின் துணைச் செயலாளர். மே 3ஆம் தேதி காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கூடுதல் அவகாசம் கேட்ட மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை மே 8ஆம் தேதிக்குத் தள்ளிவைத்ததோடு அன்றைய தினம் மத்திய அரசு கட்டாயமாக வரைவுச் செயல்திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அப்படிச் சமர்ப்பிக்கத் தவறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டுமெனவும் எச்சரித்திருந்தது.
நீதிமன்ற உத்தரவும் தேர்தல் களமும்
பலரும் எதிர்பார்த்ததைப் போலவே அன்று மத்திய அரசு வரைவுச் செயல்திட்டத்தைச் சமர்ப்பிக்கவில்லை. மே மாதத்துக்குள் தமிழகத்துக்கு நான்கு டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டுமெனக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்த உச்ச நீதிமன்றம் அவ்வாறு திறந்துவிடத் தவறினால் கர்நாடக மாநில அரசு கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்திருந்தது. மத்திய அரசைப் போலவே கர்நாடக மாநில காங்கிரஸ் அரசும் உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுவதற்கு எங்கே தண்ணீர் இருக்கிறது எனக் கேட்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட அந்தக் கடும் விளைவுகள் என்ன என்பதைப் பற்றி அதிகம் யோசிக்காமல் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டிருந்தார்.
கர்நாடகச் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் காங்கிரஸுக்குச் சவால்விட்டுக் கொண்டிருக்கும் பிரதமருக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பொருட்படுத்துவது முக்கியமானதாகப் படவில்லை. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளுக்குமே அரசியல் சாசன ரீதியில் உச்ச அதிகாரம் பெற்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பொருட்படுத்துவதைவிட ஒரு மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, அதில் வெற்றி பெறுவது முக்கியமானதாக இருக்கிறது.
வரைவுச் செயல்திட்டம் தயாராகிவிட்டதாகவும் பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்கள் பலரும் கர்நாடக மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பிசியாக இருப்பதால் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை எனவும் மத்திய அரசின் வழக்கறிஞர் சொன்னதைக் கேட்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திகைத்துப் போயிருக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் காப்பாற்றுவதைவிட ஒரு தேர்தலை எதிர்கொள்வதை முக்கியமானதாகக் கருதும் மத்திய அரசை எப்படிக் கையாள்வது என்னும் குழப்பம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். தங்களது உத்தரவைப் பொருட்படுத்தாத கர்நாடக மாநில அரசை என்ன செய்வதென்றே தெரியாமல் உச்ச நீதிமன்றம் திகைத்துப் போய்விட்டது போல் தோன்றியது. விசாரணையை மே 14ஆம் தேதிக்குத் தள்ளிவைப்பதைத் தவிர வேறு எதுவும் செய்வதிற்கில்லை என்பது போல்தான் இருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் நிலை.
இனியாவது முடிவு எட்டப்படுமா?
அடுத்த கட்ட விசாரணையின்போது கர்நாடகச் சட்டமன்றத் தேர்தல் முற்றுப் பெற்றிருக்கும் என்பதால் காவிரி நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் மத்திய அரசு உறுதியான முடிவொன்றை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கற்பனை செய்துகொள்ள முடியுமா? கடந்த விசாரணைகளின்போது வரைவுச் செயல்திட்டத்தை அமைப்பதற்குத் தடையாக இருப்பது கர்நாடகச் சட்டமன்றத் தேர்தல்தான் என்னும் ஒரு வாதத்தை முன்வைத்தது மத்திய அரசு. அதன் அர்த்தம், வரைவுச் செயல்திட்டம் கர்நாடகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்தால் அது தேர்தலில் பாஜகவின் வெற்றியை நேரடியாகப் பாதிக்கும் என்பதுதான். தென்மாநிலங்களில் பாஜவுக்கு அரசியல் ரீதியில் நம்பிக்கை தரும் மாநிலம் கர்நாடகம் மட்டுமே. கர்நாடக வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவது நாட்டின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் பாதுகாப்பதையும்விட முக்கியமானதாக ஆளும் பாஜக முடிவு செய்துவிட்டது போல் தெரிகிறது.
தமிழகத்துக்குத் திறந்துவிடத் தண்ணீர் எங்கே இருக்கிறது எனக் கேட்கும் சித்தராமையாவின் பதற்றமற்ற முகம் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன ரீதியான அதிகாரத்தைக் கேலி செய்வது போல் தோன்றுவதை ஒரு கற்பனையாகக் கருதிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பற்றிய தகவல்கள் வெளிவந்த மறுகணமே மைசூர், மாண்டியா மாவட்ட விவசாயிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக் கர்நாடக அரசு நான்கு டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட முடிவெடுத்தால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரித்திருந்திருந்தது உச்ச நீதிமன்றம்.
மே 8ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில் தங்களால் தமிழகத்துக்குத் தண்ணீர் தர இயலாது என அஃபிடவிட் ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது கர்நாடக அரசு. வரைவுத் திட்டம் தயாராகிவிட்டதாகவும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதற்காகக் காத்திருப்பதாகவும் பத்து நாள்கள் அவகாசம் அளித்தால் வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்வதாகவும் மத்திய நீர்வளத் துறைத் துணைச் செயலாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறார். கர்நாடக அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தனது மனுவில் கூறியுள்ள தமிழக அரசு, கர்நாடகம் உடனடியாக நான்கு டிஎம்சி தண்ணீரை விடுவிக்க ஆணையிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் மோடி இதை நாட்டின் இறையாண்மைக்கும் அரசியல் சாசனத்துக்கும் விடப்பட்டுள்ள சவாலாக நினைக்கவில்லை. இரு மாதங்களுக்கு முன்னால் புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் தான் பேசியது போல் நாராயணசாமியைத் தவிர மற்ற எல்லா காங்கிரஸ் முதலமைச்சர்களையும் அதிகாரத்திலிருந்து விரட்டுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸைத் தோற்கடிப்பதற்கான வியூகங்களைப் பற்றி யோசிப்பதில் மனதைப் பறிகொடுத்திருப்பவரைப் போல் தென்படுகிறார். அதற்கான வாய்ப்புகள் நெருங்கி வந்துகொண்டிருப்பது போல் அவர் கற்பனை செய்ய விரும்புகிறார். சமீபத்திய கருத்துக்கணிப்புக்களில் சில மோடிக்கும் பாஜகவுக்கும் அது போன்ற கற்பனையைத் தோற்றுவித்திருக்கக்கூடும். அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் ஆறேழு குறைந்தால்கூடச் சமாளித்துவிட முடியும்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்தபோதே அதை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு நிறைவேற்றியிருக்க வேண்டிய மத்திய அரசு தொடர்ந்து தனது பொறுப்பைத் தட்டிக்கழித்து வந்ததன் விளைவே பிரச்சினை உச்ச நீதிமன்றத்தின் கைகளுக்குப் போக வேண்டியிருந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரித் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் நடத்திய போராட்டங்களின்போது மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் தமிழகத்தை வஞ்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் இப்போது வலுப்பெற்றிருக்கின்றன.
மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு தேதி முடியும்வரை வாய் திறக்காத மத்திய அரசு கடைசி நேரத்தில் ஸ்கீம் என்றால் என்ன என விளக்கம் கோரியபோதே மத்திய அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்த விசாரணைகளின்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் எவற்றையும் கண்டுகொள்ளாத மத்திய அரசு இப்போது வரைவுத் திட்டம் தயாராகிவிட்டதாகவும் மேற்கொண்டு கால அவகாசம் கோரப் போவதில்லை எனவும் அறிவித்திருப்பது இழந்த நம்பிக்கையை மீட்டெடுத்துக்கொள்வதற்கு உதவும் எனத் தோன்றவில்லை.
கர்நாடகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நிச்சயமாகக் காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூடத் தர முடியாது எனச் சபதமிட்டுள்ள சித்தராமையா தலைமையிலான காங்கிரஸுக்குச் சாதகமாக தேர்தல் முடிவுகள் இருக்குமானால் காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரங்களில் மூர்க்கமான முடிவுகளை அது எடுப்பதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
காவிரி நதிநீரைப் பங்கிட்டுக்கொள்வதில் இரு மாநில அரசுகளுக்கும் மக்களுக்குமிடையே புரிந்துணர்வு ஏற்படுத்தப்படாதவரை அது அரசியல் சூதாட்டத்தின் பகடைக்காயாகவே நீடித்திருக்க முடியும்.
தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு தென்னிந்திய மாநில மக்களின் வாழ்வாதாரத்தைப் பணயமாக வைத்து நடக்கும் இந்தச் சூதாட்டம் தமிழகத்தில் உருவாக்கியுள்ள பதற்றம் தீவிரமானது. தமிழகம் வஞ்சிக்கப்படுவதாக எழுந்த குரல்கள், தனித் தமிழகம் பற்றிய உரையாடல்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. அந்தக் குரல்கள் வலுப்பெறும்போது இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் பெரும் அச்சுறுத்தல்கள் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.
இரு தேசியக் கட்சிகளும் அரசியல் சாசனப்படி உச்ச அதிகாரம் பெற்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்தால்தான் இந்த அச்சுறுத்தல்கள் உருவாகாமல் தவிர்க்க முடியும்.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதிவரும் தேவிபாரதி, மார்க்சிய, மார்க்சிய லெனினிய இயக்கங்களில் சிறிது காலம் செயல்பட்டவர். 1994இல் இளம் நாடக ஆசிரியருக்கான மத்திய சங்கீத நாடக அகாடமியின் பரிசு பெற்றார். இவரது சிறுகதைகளில் சில ஆங்கிலத்திலும் இந்தி, மலையாளம் உள்ளிட்ட சில இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘வீடென்ப’ என்னும் தலைப்பிலான இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் என்.கல்யாணராமன் மொழிபெயர்ப்பில் Horper Perinial வெளியீடாக Farewell Mahatma என்னும் தலைப்பில் வெளிவந்தது. காலச்சுவடின் பொறுப்பாசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். மின்னஞ்சல் முகவரி: devibharathi.n@gmail.com)