Tuesday, May 15, 2018

திருப்பதி: முதல்வருக்கு அதிர்ச்சியளித்த பக்தர்!


தனது குடும்பத்தினருடன் திருப்பதி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முன்னால் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சாமியாடி அதிர்ச்சி அளித்துள்ளார்.

சாமி தரிசனம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மே 14) மாலை குடும்பத்தினருடன் திருப்பதி சென்றார். அவரை திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, இரவு திருமலையில் உள்ள வராக சுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளார்.

முதல்வர் சாமி தரிசனம் செய்துகொண்டிருக்கும்போது அருகில் இருந்த பக்தர் ஒருவர் திடீரென ஆவேசமாக சாமியாடி கத்தியுள்ளார். சாமியாடிய பக்தர், எடப்பாடி பழனிசாமி தமிழகத்தைச் சீரழித்துவிட்டதாகவும், தன்னை வந்து பார்க்குமாறும் ஆவேசமாகக் கத்தினார். இந்த சம்பவத்தால் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாமியாடிய அந்த நபரைக் காவல் துறையினர் உடனடியாக அங்கிருந்து அகற்றி, அவரிடம் விசாரணை நடத்தினர்.

சாமியாடிய நபர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் ஸ்ரீராமலு என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சில மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு ஸ்ரீராமலு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு திருப்பதியில் தங்கிய முதல்வர் இன்று (மே 15) காலை அஷ்டதளபாத பத்மாராதனை சேவையில் சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் வரவேற்று, தரிசன ஏற்பாடுகளைச் செய்தனர். இதனைத் தொடர்ந்து, ரங்கநாயக மண்டபத்தில் முதல்வர் பழனிசாமிக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர் அவர் திருமலையிலிருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார்.

No comments:

Post a Comment