புதுடெல்லி: பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு பொருட்கள் 5 சதவீதத்துக்கு மேல் சேர்க்கப்பட்டிருந்தால் அதுபற்றி அந்த பேக்கேஜில் குறிப்பிடுவதை கட்டாயமாக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், உணவு பாதுகாப்பு மற்றும் தரம் (லேபிள் மற்றும் காட்சிப்படுத்துதல்) 2018 புதிய விதிகள் தொடர்பான முன்வடிவை வெளியிட்டது. 2 மாதங்களில் இந்த புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட இருக்கின்றன.
இதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
எந்த உணவுப்பொருளாக இருந்தாலும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருள் அதில் 5 சதவீதம் அல்லது அதற்கு மேல் சேர்க்கப்பட்டிருந்தால் அது குறித்து லேபிளில் குறிப்பிட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட மரபணு மாற்றம் செய்த உணவு பொருள் சேர்ந்திருந்தால் முதல் 3 பொருட்கள் விவரத்தை பட்டியலிட வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை பி.டி பருத்தி மட்டுமே வணிக ரீதியாக பயிரிட அனுமதிக்கப்பட்ட மரபணு மாற்ற பயிராகும். இந்நிலையில், இத்தகைய மரபணு மாற்ற பொருட்களை உணவு பொருட்கள் பேக்கேஜ்களில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என தர நிர்ணய ஆணையம் விதிமுறை கொண்டுவர உள்ளது.
அதோடு, உணவு தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் இதுபற்றிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இதுபோல், மதுபானங்களில், ஆல்கஹால் அருந்துவது உடல் நலத்துக்கு தீங்கானது, பாதுகாப்பாக இருங்கள், குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்கள் போன்ற வாசகங்களை ஆங்கில மொழியில் அச்சிட வேண்டும். மாநிலங்களில் அந்தந்த பிராந்திய மொழிகளில் அச்சிடவும் அனுமதிக்கலாம். உணவு பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றும் குறிப்பிட வேண்டும் என விதிகளில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment