Sunday, May 13, 2018

ஜெ.வை விட எடப்பாடி ஆட்சி சிறப்பானது! முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயங்கரமாக ஆட்சி செய்து வருவதாக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புகழ்ந்து பேசியுள்ளது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று (மே 12) நடைபெற்ற கோடை விழாவில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “ஜெயலலிதாவின் ஆட்சியை விட முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி பயங்கரமாக சென்று கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியைப் பார்த்தால் முதல்வர் பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றினார் என்று தொடர்ந்து செய்தி வருகிறது. தலைமைக் கழகத்தில் பார்த்தோம் என்றால் காலை 10 மணிக்கே வந்து பணிகளை ஆரம்பிக்கிறார். ஒவ்வொரு முதல்வருக்கும் ஆட்சியை நடத்துவதில் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். ஆனால், மக்களோடு மக்களாகப் பழகும் எடப்பாடி பழனிசாமியின் ஸ்டைல் வித்தியாசமானது. இந்த ஸ்டைல் இனி எந்த முதல்வருக்கும் வராது” என்று பேசினார். ஜெயலலிதா ஆட்சியை விட எடப்பாடி பழனிசாமி ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று அமைச்சர் கூறியுள்ள விவகாரம் ஆளும் கட்சித் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதத்திலேயே பேசி வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பரில் மதுரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர், “ஜெயலலிதா மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம். அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறினார். இந்தப் பேச்சு சர்ச்சையை உண்டாக்கிய நிலையில், விசாரணை ஆணையம் அமைக்கும் பணியைத் துரிதப்படுத்தியது.

அடுத்து நதிகள் மீட்புப் பேரணியில் பொதுக்கூட்டத்தில், பாடகி சுதா ரகுநாதன் என்பதற்குப் பதிலாக பரதநாட்டிய டான்சர் சுதா ரங்கநாதன் என்று உச்சரித்தது நகைச்சுவையை ஏற்படுத்தியது. அடுத்து பிரதமர் மோடியைக் குறிப்பிடுவதற்கு பதிலாக மன்மோகன்சிங் என்று குறிப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இவரின் கருத்துகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திய வண்ணம் இருந்ததால் சமீப காலமாக அரிதாகவே ஊடகங்களில் பேட்டியளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “ஜெயலலிதாவை விட சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி: திண்டுக்கல் சீனிவாசன் - எடப்பாடி பழனிசாமி இன்னும் கொஞ்சம் கொடுத்தால், அந்த விளம்பரத்தில் வரும் ‘எங்க குலசாமி எடப்பாடி பழனிசாமி’ என்று சொல்லும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவாரோ?" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment