கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. மதியம் 1 மணி வாக்கில் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் தெரியவந்தன. காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளையும், பாஜக 104 தொகுதிகளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளையும், இதர கட்சிகள் 2 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன.
இந்தத் தேர்தல் முடிவுகள், கடந்த 12ஆம் தேதி நடத்தப்பட்ட வாக்குக் கணிப்பு முடிவுகளுக்கு நெருக்கமாக அமைந்துள்ளன. இது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏபிபி – சி வோட்டர், நியூஸ் நேஷன், நியூஸ் எக்ஸ் – சிஎன்எக்ஸ், ரிபப்ளிக் டிவி – ஜன் கி பாத், திக்விஜய் – விஜய்வாணி, இந்தியா டுடே – ஆக்சிஸ் நிறுவனங்கள், வாக்குக் கணிப்பு முடிவுகளை அறிவித்தன. சாணக்யா, விஎம்ஆர் என இரு நிறுவனங்களோடு இணைந்து வாக்கு கணிப்பு முடிவுகளைத் தெரிவித்தது டைம்ஸ் நவ்.
இவற்றில் நியூஸ் எக்ஸ் – சிஎன்எக்ஸ், திக்விஜய் – விஜய்வாணி வெளியிட்ட வாக்குக் கணிப்புகள், தேர்தல் முடிவுகளோடு கிட்டத்தட்ட ஒத்துப்போகின்றன. சிஎன்எக்ஸ் வெளியிட்ட வாக்குக் கணிப்பில் பாஜகவுக்கு 102-110 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 72-78 தொகுதிகளும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 35-39 தொகுதிகளும், இதர கட்சிகள் 3-5 தொகுதிகளும் பெறுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய்வாணி வெளியிட்ட வாக்குக் கணிப்பில் பாஜகவுக்கு 103-107 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 76-80 தொகுதிகளும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 31-35 தொகுதிகளும், இதர கட்சிகள் 4-8 தொகுதிகளும் பெறுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி – ஜன் கி பாத் வெளியிட்ட முடிவுகள் இன்றைய நிலவரத்திலிருந்து சிறிதளவு மட்டுமே பிசகியுள்ளது வியப்பை உண்டாக்கியுள்ளது. பாஜகவுக்கு 104 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 78 தொகுதிகளும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 37 தொகுதிகளும், இதர கட்சிகள் 3 தொகுதிகளும் பெறுமென்று தனது வாக்குக் கணிப்பில் இந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை காங்கிரஸ் கட்சியே முன்னிலை பெறுமென்று குறிப்பிட்டன. காங்கிரஸுக்கு அடுத்த இடத்தையே பாஜக பிடிக்குமென்று கூறியிருந்தன. ஏபிபி நியூஸ் – சிஎஸ்டிஎஸ், டைம்ஸ் நவ் – விஎம்ஆர், இந்தியா டுடே – கார்வி, சி போர், டிவி 9 – சி வோட்டர் நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியானது சராசரியாக 30-40 இடங்களைப் பெறுமென்று தெரிவித்திருந்தன. இதனைத் தவிர, இந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தேர்தல் முடிவுக்கு மாறாக உள்ளன. ஆனால், தொங்கு சட்டமன்றம் அமையும் என்ற கருத்து மட்டும், தேர்தலுக்கு முன்பும் பின்பும் மாறவில்லை.
No comments:
Post a Comment