பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் ராமர், லட்சுமணனின் மறு அவதாரம் என்றும் யோகி ஆதித்யநாத் அனுமனின் மறு அவதாரம் என்றும் பாஜக எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பைரியா தொகுதி எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங். சர்ச்சைக்குரிய பேச்சுகளால் அறியப்படும் இவர், “பலாத்காரக் குற்றங்கள் அதிகரித்துள்ளதற்கு பெண் குழந்தைகளின் பெற்றோர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். பெண் குழந்தைகளை சுதந்திரமாக நடமாடவிடுவதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. பெற்றோர் பெண் குழந்தைகளை முறையாக கண்காணிக்காமல் விட்டுவிடுவதால்தான் இத்தகைய குற்றங்கள் நடக்கின்றன” என்று சமீபத்தில் பேசியது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சூர்ப்பணகை என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
நேற்று முன்தினம் (மே 10) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மோடி, அமித்ஷா இருவரும் ராமர் மற்றும் லட்சுமணனின் மறு அவதாரம் என்றும், யோகி ஆதித்யநாத் அனுமனின் அவதாரம் என்றும் குறிப்பிட்டார். இவர்கள் மூவரும் பாரதத்தில் ராம ராஜியத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கனவை நனைவாக்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 22 நமோ செயலி மூலமாக வீடியோ கான்பரன்சிங்கில் பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், "தொடர்ச்சியான தவறுகள் மூலமாக நாம் ஊடகங்களுக்குத் தீனிபோட்டு வருகிறோம். கேமராவைப் பார்த்தவுடன் தன்னை ஏதோ சமூக விஞ்ஞானி போலவும், துறை வல்லுநர்கள் போலவும் நினைத்துக் கொண்டு வார்த்தைகளைக் கொட்டுகிறோம். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது. எனவே இதுபோன்ற அர்த்தமற்ற கருத்துக்கள் கூறுவதையும், ஆர்வக்கோளாறில் கருத்துக்களைத் தெரிவிப்பதையும் நாம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். ஊடகங்கள் அவர்களது பணியைச் செய்யட்டும்” என்று அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment