Friday, May 11, 2018

இந்தியாவை அச்சுறுத்தும் கச்சா எண்ணெய்! சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் இந்த ஆண்டில் மிக அதிகமாகவே இருக்கும் சூழல் இருப்பதால் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்திலும் பணவீக்கத்திலும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.



ஈரான் நாட்டுடனான தனது அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா திரும்பப் பெற்ற செய்தி வெளியானவுடனேயே கச்சா எண்ணெய்யின் விலை கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச விலையேற்றத்தைச் சந்தித்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 77 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. இதன் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளது. மத்திய வங்கியின் கணிப்புப்படி, கச்சா எண்ணெய்யின் விலை 78 டாலருக்கு மேல் சென்றால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10 அடிப்படைப் புள்ளிகள் குறையும் என்று எச்சரித்துள்ளது. 2019 மார்ச் வரை 7.4 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்தியாவின் வளர்ச்சி இலக்கு இதன் மூலம் கடினமாகலாம். மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவின் பணவீக்க விகிதத்தில் 30 அடிப்படைப் புள்ளிகள் அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய இறக்குமதிப் பொருளாக உள்ள கச்சா எண்ணெய்யின் விலை உயர்வால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்தியா தனது ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் மூன்றில் இரண்டு பங்கை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வோடு சேர்த்து டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு குறையும் போது இந்தியாவுக்கு அதிக நிதிச் சுமை ஏற்படும் அபாயம் இருக்கிறது. 2018ஆம் ஆண்டில் பிரெண்ட் கச்சா எண்ணெய்யின் சராசரி விலை பேரல் ஒன்றுக்கு 75 டாலராக இருந்தாலே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வர்த்தகப் பற்றாக்குறை 2.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று நோமுரா ஹோல்டிங் நிறுவனம் தனது ஆய்வில் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment