நேபாள பிரதமர் கட்க பிரசாத் சர்மா ஓலி, கடந்த மாதம் இந்தியா வந்தார். பிரதமர் மோடியைச் சந்தித்த சர்மா ஓலி, இரண்டு நாடுகளுக்கிடையேயான பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை நேபாளம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது அரசின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையின் அடிப்படையில் இரண்டு நாள்கள் அரசுமுறை சுற்றுப் பயணமாக இன்று (மே 11) நேபாளம் செல்கிறார்.
நேபாளம் ஜானக்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதையின் கோயிலிலிருந்து தனது பயணத்தை தொடங்குகிறார். அதன் பின்னர் மதியம் விமானம் மூலமாகப் பிரதமர் மோடி நேபாள தலைநகரான காத்மண்டு செல்கிறார். அந்நாட்டுப் பிரதமர் சர்மா ஓலியைச் சந்திக்கிறார். பின்னர் நாட்டின் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும், இருநாட்டுப் பிரதமர்களின் முன்னிலையில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நேபாளத்தில் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 900 மெகா வாட் மின் உற்பத்திக்கான அனல் மின்நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் பிகாரின் ராக்ஸ் - காத்மாண்டு இடையே ரயில் போக்குவரத்துத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நேபாள பிரதமர் சர்மா ஓலியின் அழைப்பின் பேரில் நாளை நேபாளம் செல்கிறேன். இந்தப் பயணமானது இந்திய நேபாள உறவை மேம்படுத்தும் விதமாக அமையும். இரு நாடுகளிடையே ஆழமான ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாகவும் உறவை மேம்படுத்தும் விதமாகவும் பேசவுள்ளோம்’ என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பின்னர் பிரதமராகப் பதவியேற்ற மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக நேபாளம் சென்றார், தற்போது மூன்றாவது முறையாக நேபாளம் செல்கிறார்.
No comments:
Post a Comment